மஹா காளியின் அருள்.

178

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

02•12•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(155) மனிதனே புனிதன் —
மஹா காளியின் அருள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது நாகராஜன் சுவாமி அவர்களின் சற்குருநாதர், மகா காளிமாதாவின் அருள் ஆசியைப் பெறுகின்ற வழிமுறைகளைக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அதற்குச் சிலகாலம் காத்திருக்க வேண்டும் என்றார். இங்கு ஆழியாற்றின் கூடுதுறையில் குடிகொண்டிருந்த காளிஅம்மன் சக்தியைக் கேரள மாந்திரீகர் ஒருவர் கொண்டு சென்ற வரலாற்றையும் கூறினார். பதற்றத்தை உண்டுபண்னும் அந்த வரலாற்றையும் கேட்போம்.

ஆழியாறு, உப்பாறு, பாலாறு இம் மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் துறையைக் கூடுதுறை என்று சொல்லுவார்கள். அங்கு இறந்துபோன ஆத்மாக்களுக்குப் பரிகார பூஜைகள் நடைபெற்று வந்தன. கூடுதுறையின் தென்புறப் பகுதியில் இச்சிமரமும், எட்டிமரமும் வளர்ந்தோங்கி உள்ள இடத்தில் காளியம்மன் கோயில் கூரை வேயப்பட்டு வயல் வெளி யின் அமைதியிலும், ஆழியாற்றின் சலசல சப்தத்திலும், ஓலமிடும் காற்றின் ஓசையிலும் அம்மன் நிம்மதியாக வாழ்ந்திருந்தாள். காவலுக்குப் பேச்சியம்மனும் இருந்தாள்.

திடமுள்ள மனதுள்ளவர்கள் துணையிருந்தால், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற தினங்களில் யாரும் அங்கே போகமாட்டார்கள். அமானுஷ்ய சக்திகள் பற்றிய வதந்திகள்தான் அதற்குக் காரணம். அருள் வாக்குக் கேட்க வரும் கூட்டம் ஆற்றின் ஓரத்தில் உள்ள பாதை யில் சாரிசாரியாகச் செல்வது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

கச்சிதமான வலுவான தேகம், அள்ளி முடிந்த கொண்டை, கம்பீரமான முறுக்கு மீசை, சாந்து சந்தனம் பூசிய நெற்றியில் மிகப்பெரிய குங்குமப்பொட்டு சகிதம், வெற்றுடம்புடன் கையில் உடுக்கையை எடுத்து பம்பம் என்று அடிக்க ஆரம்பித்தால், பூஜாரியுடன் சேர்ந்து அநேகம்பேர் அருள் வந்து ஆடுவார்கள். பூஜாரி குறிசொல்வார். கேட்ட காரியம் நடந்து விட்டால், அவரவர்கள் வசதிக்குத் தக்கபடி பரிகாரம் இருக்கும். அனேகமாகக் கோழி, சாராயம் தான் அதிகப்பேரிடம் கேட்பார். மற்றவர்கள் காணிக்கை போடுவார்கள்.

நல்ல படியாக நடந்து வந்த கோயிலுக்குப் பக்தர்கள் கூட்டம் வருவது படிப்படியாகக் குறைந்து வந்து, ஒரு கால கட்டத்தில் யாருமே அங்கு வராமல், பூசாரியின் வருமானமும் நின்று சோகமயமாகி விட்டது. ஆற்றின் கரையில் புல்தரையில் அமர்ந்து அம்மனை நினைந்து பூஜாரி அழுது கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டிருப்பது தொடர்ந்தது. ஒரு நாள் பூஜாரியின் நண்பர் அவரிடம், “ஏம்ப்பா காளிமுத்து, பிரபல்யமான கோயிலுக்கு ஜனங்கள் வருவது நின்று விட்டால் கண்டிப்பாக ஏதாவது சூனியம், ஏவலாகக்கூட இருக்கலாம். நீ வீணாகக் கண்கலங்காதே. எதற்கும் பூஜையைப் போடு! காளியை அழைத்துக் கேட்டால் உண்மை தெரியுமல்லவா?” என்று ஆலோசனைகள் கூறினார். அதில் மனது திடப்பட்டு காளியம்மனை அழைத்து அருள்வாக்குக் கேட்பது என எண்ணி, மளமளவெனப் பூஜை காரியங்களையும் துவங்கினர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button