ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.
வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!
மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2
(28) காளாதித்தியரின் இறையருள் வல்லமை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வேதியர் வேணுநாதரின் எண்ணத்தை அறிந்து கொண்ட வேதாளரிஷியானவர், “ஐயா வேதியரே, அனைத்தும் இறைவன் செயல் என்று கூறும் நீர் தீயசக்திகளை வேரறுக்க வந்த விக்கிரமாதித்திய ராஜன் ஞான சீல மாந்திரீகனை அழித்து காளி தேவியின் வரபலம் பெற்றான். ‘வேண்டும் வரங்களைக் கேள் ‘ என்ற தேவியிடம் என்ன வரம் கேட்டார் தெரியுமா? என்றார். அவர் முகத்தை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தார் வேதியர். முதல் வரமாகத் தனது பரிசுத்தமான மனதில் சதா காலமும் தெய்வீக சிந்தனை இருந்து வர வேண்டும் என்றும், எப்போதெல்லாம் தான் தேவியை நினைக்கின்றேனோ, அப்போதெல்லாம் தயவுடன் கூடிய தங்களின் தரிசனம் கிடைக்க அருள் புரிந்து வர வேண்டும், எப்பொழுதும் தரும சிந்தனை மனதில் இருந்து வர வேண்டும், மற்றும் மாந்திரீக முனிவனால் தலைகள் துண்டிக்கப்பட்ட 999 மன்னர்களும் உயிர்ப்பித்து எழ விரும்பும் தங்களின் அடியவனுடைய எண்ணத்தை ஈடேற்றித்தர வேண்டும் என்ற விக்கிரமாதித்திய மன்னரின் அறிவு கூர்மையையும், நீதி நேர்மையையும் நீர் அறிந்திருப்பீர் அல்லவா? மற்றவர்களுக்கு வரப்போகும் ஆபத்துக்களை கடிந்து நீக்கும் நீதி மன்னனல்லவா நமது ராஜன்? ஆகட்டும், உமக்கு வரும் ஆபத்தின் எச்சரிக்கையைக் கூறி விட்டேன். இதனை ஏற்பதும், ஏற்காததும் உமது பாடு! வருகிறேன்” என்று கூறியதும், ” வேதாள தரிசனத்தைக் காட்டாமல் செல்வது ஞாயமா? ” என வேதியர் கேள்வி கேட்டார். அதற்கு வேதாள ரிஷி, ” மரத்தில் தொங்கிய எமது உடலைக் கீழிறக்கி பச்சிலை மூலிகைகளால் மூடி உயிர் வரச் செய்த உமக்கு மருத்துவமும் தெரியுமா?” என்றதும், ” சீன தேசத்து யாத்திரீகன் பாகியானிடம் இதனை அறிந்தேன். காம சூத்திர முனிவர் வாத்சல்யாயரும் பல அரிய பச்சிலை ரகசியங்களை அவரிடம் அறிந்து கொண்டு இருக்கிறார். இவை ஆபத்துதவிகள்” என்ற வேதியர் தனது முன்னால் நின்ற பிராமணன் திடீரென வேதாள வடிவம் எடுக்கக் கண்டு பயத்தில் நடுங்கி கண்களை மூடிக் கொண்டார்.
ஒரு கணத்தில் மூச்சு நின்று விட்டது போல இருந்தது. பிறகு கண்களைத் திறந்தவர் முன்பு வேதாளம் தனது வடிவைச் செம்பக நாதர் கோயில் ஸ்தானிகராகவும் மாற்றிக் காட்டியது. தனக்கு இறையனார் வைத்த இன்னொரு பெயரும் உண்டு எனவும், அது ‘மகா காளாதித்தியன்’ என்று கூறியபடியே மறைந்து போனது. காளாதித்தியன் என்னும் மற்றொரு பெயர் கொண்ட வேதாளம் காற்றில் மறைந்த பிறகு, வேதியர் வேணுநாதர் வனபத்ர காளியம்மையை தரிசனம் செய்து விட்டு உஜ்ஜெய்னி மாகாளிப்பட்டினம் வந்து சேர்ந்தார். சமயம் வாய்த்த போதெல்லாம் மூலிகை ரகசியங்களையும், அதன் பயன்களையும் தேவநாகரியில் ஏட்டில் பதிவு செய்து கொண்டார். எதிர்கால மக்களின் நலன்கருதி இவ்வாறு பதிவு செய்ததுடன் அல்லாமல் எந்தக் காரியம் செய்தாலும் பிராணாயாமத்தில் காரிய சித்தி அடைவதைப் பற்றியும், தீயதை விலக்குவதையும் வெளிப்படையாகப் பதிவிட்டார். இதனைப் பற்றி கார்த்திகேயப் பெருமான் தேவநாகரியில் குறித்து வைத்துள்ளதை வாசித்து உணர்ந்தது வைத்திருந்தார். இது கன்னித்தமிழிலும் பதிவு பெற்றுள்ளது. எட்டிரண்டு பெட்டி ரகசியங்கள் என்பன பற்றிய அநேக விளக்கங்கள் முருகப்பெருமான் அருளால் வெளிப்பட்டு சித்தர்களும், முனிவர்களும் சுவாசக்கலையின் அனுபவ நலன்கள் பெற்று நீடு வாழ்ந்தனர்.
இதனைப் பயிற்சி பெறும் அருமைச் சீடர்களுக்கு, சத்திய தர்மங்களைக் கடைப்பிடித்து வாழும் உண்மை குருநாதர்கள் கண்டிப்பாக வெளிப்படுத்தி சீடர்களை உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் குருநாதர்களுக்கு அழகு. இந்த விபரங்களை சற்குருநாதர் ஈஸ்வரபட் சுவாமி அவர்களிடம் நமது தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் அறிந்து கொண்டதை, வெளிப்படையாக உண்மை பக்தர்களுக்குப் போதித்து வருவது இன்றளவிலும் கண்கூடு என்பது உண்மை. விக்ரமாதித்திய மன்னனின் பெரிய அன்னைக்குப் பிறந்த மூத்த சகோதரர் மகான் ஶ்ரீ வல்லப ரிஷியாவார். அவர்தான் காலச்சக்கரத்தில் நாகராஜன் சுவாமியை அழைத்துக் கொண்டு பிரயாணம் செய்து உஜ்ஜெய்னி மாகாளிப் பட்டினம் அழைத்து வந்தவர். வேதியர் வேணுநாதரைப் பார்க்க வந்த அம்மகான் ஊருக்கு வெளியே இருந்த நந்தவனத் தோட்டத்திற்கு வருகை புரிந்தார். அவரை வரவேற்று ததியன்னம், பால், பழங்கள் பறிமாறி சிறப்பாக உபசரித்தனர். அதிதியாக யார் வந்தாலும், கணவனும் மனைவியும் ஆகாரம் படைத்து உணவருந்தச் செய்து வந்தனர். இதனை பகவத் காரியமாக அவர்களிருவருமே எண்ணி வாழ்ந்து வந்தனர். உணவருந்திய பிறகு அங்கிருந்த பாரிஜாத மரத்தின் கீழே அமர்ந்து கொண்டனர்.
(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வெளி வரும்)
வளம் பெருக! அருள் பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்,
மதுரை M. மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,
பொள்ளாச்சி – 2 .
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.