ஶ்ரீ ராமர் வாழ்வில் மந்தரையின் சூழ்ச்சி.

707

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(26) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

ஶ்ரீ ராமர் வாழ்வில் மந்தரையின் சூழ்ச்சி.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிவபக்தனாக இருந்தும் தான் வாழும் அசுரக் கோட்டடையில், அக்கினி  மூலைப் பகுதியில் சிவலிங்கப் பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்ததால், தனது குல நாசம் அடைவதற்குத் தானே காரணம் என்றாகிப் போனான். இதனை ராவணனின் தங்கை சூர்ப்பனகை, ராஜவாழ்வு மனையடி சாஸ்த்திரம் கற்றுத்தேர்ந்த அவள், தனது அண்ணனிடம் எச்சரித்தும் இருந்தாள். என்ன பயன்? இறையருளால் நிச்சயம் செய்யப்பட்ட, அவனவன் விதியை அவனவனாலேயே செய்த வினையால் உருவாக்கப்பட்ட, காலத்தால் கொண்டு வரப்பட்ட, வினைப் பயனை அனுபவித்துத்தானே தீர வேண்டும்! ராவணனும் அவனறிந்தும், அறியாமலும் செய்த குற்றங்களுக்கு, இறைவனால் வழங்கப்படும் தண்டனையை ஏற்றுக் கெள்ளத்தானே வேண்டும்! ஏற்றுக் கொண்டாலும், ஏற்கா விட்டாலும் அவன் இன்னுயிரை மாய்க்க, விதி சீதையின் வடிவத்தில் வந்தே வந்து விட்டது. இயற்கையின் இயல்பே அப்படித்தான்!   அதனைப் போன்றே ஶ்ரீ ராமரின் வாழ்வில் விதி, மந்தரையின் வடிவத்தில் வந்தது. தசரத சக்கரவர்த்தி கைகேயி தேவியை மணம் புரிந்து அயோத்திக்கு அழைத்து வரும் போது, சேடியாக உதவிக்கு உடன் வந்தவளே மந்தரை என்ற பெயருடையாள்

 சூழ்ச்சி மிகக் கொள்வாள்; பிறர் வாழச் சகிக்காத குணமுடையாள்! அவள் தனது தலைவி கைகேயினிடம் சேதி ஒன்றைக் கொண்டு வந்தாள். அது ராமரின் பட்டாபிஷேக நிகழ்வு பற்றியதாக இருந்ததால் அவசரமாகக் கொண்டு வந்தவள், கைகேயின் மனதில் விஷ எண்ணங்களை ஊட்டுவதற்குத் தயாராகவே வந்தாள். ராமர் பட்டாபிஷேக வைபவத்தை நிறுத்த வேண்டும் என்பது நோக்கமாக இருந்ததினால், அதற்கு உண்டான காரணங்களை பலவற்றைப் பலபடியாகக் கூறத்துவங்கினாள்.

 

மனிதன் பிறருக்கு நன்மையும் செய்யலாம் அல்லது தீமையும் செய்யலாம். இதனால் ஏற்படும் பாவபுண்ணியத்திற்கு இயற்கை சக்தியோ, இறைசக்தியோ பொறுப்பல்ல! குற்றம் குறைகளைப் புரிபவனின் அதற்குரிய செயல்களைக் கவனித்தோமானால், அது இயல்பாக அவனுடனே பிறந்து விட்டதைப் போலவே இருக்கின்றது. அதனை அவன் அறிவதில்லை! அவனது உள்ளமும், உடலும், பஞ்சேந்திரியங்களின் செயலும் தீமை மிகுந்த எண்ணங்களில் மிகவும் பழக்கமாகி விடுகின்றன. உண்பது, உறங்குவதைப் போன்றே அவனுக்குத் தீமையான  காரியங்கள் இயற்கையாக மாறிவிடுகின்றன. அன்பு, அகமகிழ்வு, சேவை புரிதல், மன்னிக்கும் மனம் இவைகளைக் கொண்டவர்களை விரோதமாக எண்ணுகின்றார்கள். மந்தரை வாழ்ந்த வாழ்வு இப்படித்தான் இருந்தாலும் அதனை பிரபஞ்ச ஆற்றல் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொள்கிறது. கைகேயியின் மனதைக் கூனி மந்தரை மாற்றி விட்டாள். ராமன் ஆட்சிக்கு வந்து விட்டால் கௌசல்யா தேவியின் செல்வாக்குப் பெருகிவிடும் என்றும், அவளுக்குக் கைகேயி அடிபணிந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம் எனறு மனதில் பயத்தை உருவாக்கி விட்டாள். தசரதனின் பிரியத்திற்குப் பாத்திரமான கைகேயியின் மைந்தன் பரதன் அரசுரிமை ஏற்றால் ஏற்படும் செல்வாக்கு, பகட்டான வாழ்வு பற்றி மனதில் புரிய வைத்தாள். தசரதன் யுத்தம் செய்த காலத்தில் அவனுக்கு ரதம் ஓட்டிய கைகேயி, அவனுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, மிகவும் சாதுர்யமாக ரதத்தைச் செலுத்தி, தனது காதல் கணவனின் உயிர்காத்தாள். அதற்குப் பிரதி உபகாரமாக இரண்டு வரங்களைத் தருவதாக தசரதன் வாக்களித்தான். சமயம் வரும்போது கேட்டுப் பெற்றுக் கொள்வதாகக் கைகேயி கேட்டுக் கொண்டாள். அதனை நினைவு படுத்தி, பரதன் நாடாளவும், ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசியாகிக் காடாளவும் வரம் கேட்கும்படி ஆலோசனை கூறினாள் கூனி மந்தரை. 

 

எவ்வகையிலும் இயற்கையின் இயல்பானது, பகவான் அவதாரமாகிய ஶ்ரீராமருக்கு உதவிகள் செய்திடவே மற்ற யாவரையும் பயன்படுத்திக் கொண்டு விட்டது என்பதுதான்  உண்மை. தெள்ளத் தெளிவாக  ராமர் அப்பாவி மனித அவதாரம் தான்; ஆனால் உலகையே வசமாக்கி ஆட்சி புரிந்திடும் தன்மையை அவர் வெளிப்படுத்திக் கொண்டார். ஶ்ரீ ராமரை சக்கரவர்த்தித் திருமகன் என்ற அடை மொழியால் குறிப்பிட்டதன் காரணம் அவர் தனது உடலைத் தன் உணர்ச்சிகளை வென்றதால் தான்! தனது வனவாச காலத்தில் அகத்தியரிடம் கற்று

க் கொண்ட உபதேசத்தில் மிகவும் முக்கியமான பாடம் உடலை வெல்லுதலே! அதன் பிறகே ராமரின் மனத் துக்கம் நீங்கி, உடலின் துன்பத்தில் இருந்தும் விடுபட  முடிந்தது. உடலுக்கும், ஆன்மாவிற்கும் உள்ள தளை என்பது தொல்லை தரும் பிறவியைக் குறிப்பதாகும். அல்லல் அறுந்த பிறகே ஆனந்தமயமாம்! பிறகு அவன் சுதந்திர மனிதன் என்ற மகாஞானி.

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button