உயர்ந்த மனநிலையே வாழ்வாக அமைக்கிறது.

591

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(21) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

உயர்ந்த மனநிலையே வாழ்வாக அமைக்கிறது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மகாயாகம் நிறைவு பெற்ற பிறகு அரசர் ஜனகரின் மகள் சீதாதேவியின் வாழ்க்கைத் துணைவரைத் தேர்வு செய்யும் நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜனகமன்னரிடம் இருந்த சிவதணுசை வளைத்து நாணேற்றும் ராஜகுமாரன் சீதையை மணந்து கொள்ளத் தகுதியும், உரிமையும் உடையவன் ஆவான் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. சிவதணுசின் வலிமையைக் கண்ட எவரும் நிபந்தனையை ஏற்கத் துணியவில்லை. பிறகு விஸ்வாமித்திர மகரிஷியின் வேண்டுதலின்படி பதினாறே வயது நிரம்பிய வீரம் செறிந்த ராமன், சிவதணுசை  வளைக்க முன்வந்த போது அரச சபையே ஆச்சரியம் உற்றது. ஶ்ரீ ராமர் தனது மனதை, அதன் ஆற்றலை ஒரு முகப்படுத்தும் கலையைத் தனது குலகுரு வஷிஷ்ட மகரிஷியிடமிருந்து பூரணமாகக் கற்றுத் தேர்ந்திருந்தார். இதனைக் கற்றுக் கொண்டவர்கள் பல பிறவிகள் எடுத்துக் கழிக்க வேண்டிய ஜென்ம வாழ்க்கையின் கால அளவைக் குறைத்துத் தான் பிறந்த ஒரே பிறவியிலேயே அறிவின் முழுமையால் பிறவித்தளையை நீக்கிக் கொள்கிறார்கள். மனம் ஒருமுகப்படப்பட அறிவின் விருத்தி வளரந்து கொண்டே தன்னை உயர்நிலைப் படுத்தும். ராமர் சிவதணுசை இடக்கரத்தால் பூப்போல எடுத்தார்; நணேற்ற வலக்கரத்தால் வளைத்தார். அபூர்வ தணுசின் தெய்வீக ஆற்றலை  ராமர் பெற்றுக் கொண்டதும், அது இரண்டு துண்டங்களாக இற்று பூமியில் வீழ்ந்துபட்டது. பூமியில் உழவுத் திருவிழா நடைபெற்ற நாளன்று ராஜரிஷி ஜனகர் உழுதபோது படைச்சாலில் இருந்து பூமிமகளாக வெளிப்பட்ட ஶ்ரீ சீதாதேவியை ராவண வதத்திற்குக் காரணமாகப் பிறந்தவளை, ஶ்ரீ ராமர் மணந்து கொள்ளும் வாய்ப்பு ராஜசபையில் ஏற்பட்டது. 

 

மணவாழ்க்கைக்கு அனைத்துத் தகுதிகளும் வாய்க்கப் பெற்றவனா? என்ற சோதனையில் வெற்றி ஈட்டிய ராமரை, அனைவருமே தாம் பெற்ற வெற்றியாக எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து ஜெயகோஷமிட்டுப் பாராட்டி உண்மையில்  மகிழ்ச்சியுற்றனர். ராமரை ராஜரிஷி ஜனகர் ஆசிகளும் கூறி வாழ்த்தினார். ராவணவதத்திற்குத் தேவையான ஆற்றல் சக்திகளை அப்பாவி மனிதனாக அவதரித்த விஷ்ணு இப்படியாகப் பற்பல வழிகளில் சேமிக்கத் துவங்கினார். மன்னர் ஜனகரிஷியின் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசிகள் மூவரைத் தேர்வு செய்து முறையே பரதன், லக்ஷ்மணன், சத்ருக்ணன் ஆகியோருக்கு ராமர் சீதா  திருமணவிழாவில் இல்லறம் ஏற்கும் பாக்கியத்தை ஏற்படுத்தித் தந்தனர். இது அக்காலத்திய பாலவிவாகங்கள் என்று காலத்தை உணர்ந்த ஞானியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு ராஜகுமாரர்களுக்குத் திருமண விழா நடத்தும் மண்டபத்தினுள் புயல் போன்று நுழைந்து ராமரைப் பலிகொள்ள ஆவேசமாக நெருங்கினார் ரிஷி ஒருவர். அவரே ஜமதக்கினி முனிவர் ரேணுகா தேவிக்கு இளைய மகனாக அவதரித்த விஷ்ணுவின் அவதாரமாகிய பரசுராமர் ஆவார். தனது தந்தையான ஜமதக்கினி முனிவரை அரசன் ஒருவன் கொன்றொழித்த காரணத்தால்,  நூற்றி எட்டுத் தலைமுறை அரசர்களைக் காவு கொண்டு பழிக்குப்பழி வாங்குவேன் என்று சபதம் செய்திருந்தார். விஷ்ணு தணுசைத் தோளில் தாங்கி, வலது கரத்தில் பரசு என்ற மழுவாயுதத்தை ஓங்கிப் பிடித்தபடி, தன்னோடு யுத்தம் புரிந்து மாண்டு போகுமாறு ராமரை நோக்கி அறைகூவல் விடுத்தார் பரசுராமர்.

 

அனைவரும் ராமருக்கு உயிர்ப்பிச்சை வழங்கும்படி அவரிடம் மன்றாடியபடி இருந்தனர். ஆனால் ராமரோ அழகிய புன்னகை மாறாமல் கம்பீரமாக அவரது அருகில் நெருங்கிச் சென்று எதிரே அமைதியாக நின்று கொண்டார். ஷத்திரிய குலத்தினை வேரோடு மாய்த்தொழிக்க சபதம் பூண்டிருந்த அவரின் கண்கள் அக்கினிப் பிழம்பாகக் காட்சியளித்தன. கோபத்துடன் கடுமையான சொற்களால் ராமபிரானை ஏசினார். கருணையுடன் குழைந்த கண்களால் அவரைப் பார்த்தார் ஶ்ரீ  ராமர். கண்களை நேருக்கு நேராகப் பார்த்ததும் பரசுராமரின் ஆவேசம் அடங்கிப் போய், தாய் முகம் கண்ட சேயாகிப் போனார். அவரிடம் இருந்த விஷ்ணு தணுசை வாங்கிய நொடி நேரத்தில் பரசுராமரின் ஆற்றல்கள் அனைத்தும் ஶ்ரீ ராமரிடம்  சென்று தங்கியது. பொறுமையுடன் நாணை  ஏற்றிய ராமர் அவரிடம், “விப்ரரே ராமபாணம் என்றும் குறி தவறியது கிடையாது. அதன்  இலக்கு எது என்று கூறுங்கள்?” என்றார். அதற்குப் பரசுராமர், “ஐயனே தங்களின் அவதார நோக்கத்தை அறிந்து கொண்டேன். தங்களது இலக்கு எமது ஆணவ, அகங்காரமாக இருக்கட்டும். அதனை அழித்து விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அப்படியே நிகழ்ந்தது! ஆற்றல் இழந்துவிட்ட பரசுராமர் மீண்டும் தவம் செய்திட ராமரிடம் விடை பெற்றுச் சென்றார்.

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button