சக்தி பெற வைக்க வந்த அவதார சக்தி!

441

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(17)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

சக்தி பெற வைக்க வந்த அவதார சக்தி!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தசகண்ட ராவணன் தாம் பெற்றிட்ட வரபலத்தின் மகிமையால் மனநிறைவு அடைந்திடாமல், அகந்தை மிகக் கொண்டு சாது ஜனங்களுக்கு அநேக இன்னல்களை உண்டாக்கிக் கெண்டிருந்த அராஜக கால கட்டம் அது. அந்தக் காலத்தில் இருந்த பொறியியல் வல்லுனர்களின் திறத்தால் வடிவமைக்கப்பட்ட புஷ்பக விமானம் என்ற  வானூர்தி ஒன்று ராவணேஸ்வரனிடம் இருந்தது. அதனைத் திறம்பட இயக்கவும் அவ்வேந்தன் நன்கு கற்றிருந்தான். தேச சஞ்சாரம் செய்வதில் ஆர்வமுடைய அவன் அதில் அமர்ந்து, தான் இஷ்டப்பட்ட இடங்களுக்குப் போய் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அது சமயம்  ராவணன் கண்களில் தேஜஸ் மிகுந்த ஓர் இளம் தவயோகினி தவமிருந்த  நிலையில் தென்பட்டாள். அவள் பேரழகில் மதிமயங்கி மோகப்பித்து தலைக்கு ஏறிய ராஜன் கிறுகிறுத்துப் போனான். அவளது முன்னால் நின்று கொண்டு பிதற்றிய அவனது நிலை கண்டு பதறி எழுந்தாள் இளம் தவயோகினி. அவனிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளத் தப்ப முயலும் யோகினியின் கரங்களைக் காமம் மீறிடப் பற்றிக் கொண்டான் அசுர வேந்தன். தனது தவவாழ்வினுக்கு ஊறு விளைவிக்கும் அவனது பிடியில் இருந்து எப்படியோ தப்பித்துக் கொண்ட அவள், கோபம் மிகுத்து தசகண்ட ராவணனுக்குக் கடுமையாக சாபமிட்டாள். அசுர ராஜன் அதிர்ச்சி அடைந்தான்.

 

” ராவணா, நீயும் உனது குலமும் உனக்குப் பிறக்கும் பெண்ணாகிய குலச்செல்வியால் அழிந்துபட்டுப் போகக் கடவது. உன்மீது விருப்பம் உறாத எந்தப் பெண்ணையும் நீ தீண்டினாலும், அக்கணமே உனது சிரசு வெடியுண்டு மாண்டு போகக் கடவாய். எனது உடலை அக்னி பற்றி கொண்டு அழிப்பதைப் போன்றே உனது நாடும் நகரமும் அக்கினியினால் அழிந்து பாழ்பட்டுப் போகும்” என்று சபித்தபடி தனது உடலை அக்கினிக்கு இரையாக்கி, ஓலமிட்டபடியே, அவனது கண்களின் முன்னால் எரிந்து சாம்பலாகிப் போனாள். அவளது எரிந்து போன உடலின் சாம்பலை, தனது உடலில் அள்ளிப்பூசிக் கொண்டு நிறைவேறாத ஏக்கத்தால் தவித்துப் போனான். யோகினியின் உடலும், உயிரும்  சென்ற பிறகு அவளது உடலை இதுவரை ஆண்டு வந்த உள்ளம் மாத்திரமே எஞ்சி நின்றது. பழிவாங்கும் அவள் எண்ண உணர்வுகள் அவளின் உயிர் பிரிந்த பிறகு , அறியாமை இருளாக அங்கும் இங்கும் அலை பாயத்துவங்கிய வேளையில்,  சாம்பலைத் தனது உடலில் ராவணன் பூசிக் கொண்டதும் அது அவனைப் பற்றிக் கொண்டது. அவள் அவனது உடலுக்குள் தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள உயிரணுவாகச் சென்று தஙகி விட்டாள். அவனது குலத்தை வேரறுக்க ராவணனுக்கு மகளாகப் பிறந்தும் விட்டாள். உலகத்தின் உயிர் எது? என்ற வினாவிற்கு விடையும் தந்து விட்டாள். அது எதுவெனில்,  உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், சகல ஜீவர்களும்  எல்லாக் காலகட்டங்களிலும், சதா உருவம் மாறி, மாறி வருவதும், சிதைந்துபட்டு வேறு ஒன்றாகத் தோன்றுவதும்  உலகத்தின் இயல்பாகும். சிதைவதும், மாறுவதுமான தோற்றமே பூவுலகினுக்கு உயிராய் விளங்க வேண்டும் என்பதே இறைவனது ஆணையும் ஆகும். அதன்படியே அனைத்தும்  நடை பெற்றது.

 

ராவணேஸ்வரன் தனது கோபத்தினால்  செய்த பாவங்களைவிட மிகவும் அதிகமான பாவங்களைத் தனது காம உணர்வுகளால் செய்திருக்கின்றான். தனது அறிவை இழந்து அவன் கோபத்தினால் செய்த பாவங்களால், சிறிதளவு துன்பத்தை அனுபவித்து இருக்கின்றான். ஆனால் அதனைக் காட்டிலும் ஆசைகளினாலோ அல்லது காம விகாரங்களினாலோ தூண்டப்பட்டு  செய்கின்ற குற்றங்களில் மனம் துன்பப்படும் காரியம் ஏற்படுவதில்லை! மனம் நோகாமல் பாவச் செயல் செய்து விடுவதினால் அதுவே பெருங்குற்றம் என நீதி  கூறுகின்றது. தான் செய்தது குற்றம் என்று உள்ளத்தில் தோன்றாதவரையில் இயற்கை மனிதனின் மீது கருணை கொள்கிறது. மன்னிக்கவும் செய்கிறது. மனிதன் தான் செய்த குற்றத்தை எண்ணி வருந்தும் போதுதான் இறைவனின் நீதி தனது செயலைச் செய்து விடுகின்றது. இறை நீதியானது, உலகம் முழுவதிலும் உள்ள ஜீவர்களின் அமைப்பை, அவன் படைத்த உலகங்களின் அமைப்பைச் சார்ந்தே இயங்கிக் கொண்டே இருக்கின்றது என்ற எண்ணத்தை, ராவணன் தனது மதியை இழக்கச் செய்த காமகுணத்தால் மறந்து போய் விட்டான். அதனால்தான் அவன் எவ்வளவோ வரபலம் பெற்றிருந்தும், அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிப்போனது. தான் பெற்ற வரத்தைத் தவறான பாதையில் கவனத்தைச் செலுத்தித் தனது அழிவுக்குத் தானே காரணமாகிப் போனான். இறைவன் தக்க தருணத்தில் ராவணனைத் தண்டிக்க, ஓர் உத்தம மனித அவதாரத்தை எடுத்து வந்து விட்டார். 

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம், ஓம் குருவே துணை!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்ல ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button