துறவு எண்ணமும் காரணமும்.

239

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15•08•2016,
திங்கட்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(42) மனிதனே புனிதன் —
துறவு எண்ணமும் காரணமும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமியின் சிறு வயது முதற் கொண்டே அகால மரணங்கள் அடைபவர்களை அருகில் இருந்து காண வேண்டிய சூழ்நிலைகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருந்தது. மரணத்திற்குப் பிறகு அவர்களின் நிலைகள் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பிலேயே இருந்து வந்தது. இரட்டை ஜடை கிட்டிணன் என்ற கிருஷ்ண மூர்த்தி, சைக்கிளில் குரங்கு பெடல் போட்டபடி, சைக்கிளை இங்குமங்கும் ஆட்டியபடியே சென்று, பாரம் ஏற்றி வந்த லாரியின் பக்கவாட்டினுள் சென்று விழுந்தான். அவனையும், சைக்கிளையும் துவைத்தபடி லாரியின் சக்கரம் மேலேறி நின்றது. சைக்கிளை பிடித்தபடி சந்தோஷமாக மலர்ந்த முகத்துடன் உயிர் பிரிந்திருந்தது. சிரித்த முகத்துடனே சிதையிலும் உடல் கிடந்தது.

இவர்கள் குழுவில் வாயாடி சிவகாமி புதுப் பட்டுப் பாவாடையுடன் ஊரெல்லாம் சுற்றி வீடு வீட்டிற்குக் காட்டி மகிழ்ந்து, மெயின் ரோட்டில் தார்சாலை போட்டுக் கொண்டிருக்கும் இடத்தில் மரத்தின் நிழலில் நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள். பொன்னம்மாள் பாட்டியும், சுவாமியும் பார்க்கும் போது ரோடுரோலர் இஞ்சினைப் பிடித்தபடி வண்டி முன்னும் பின்னும் நகரும் போது போவதும், வருவது மாக விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. பின்புறத்தில் சக்கரங்களுக்குக் குடத்தில் நீர் ஊற்றும் இரண்டு பெண்களும் நீர் கொண்டு வரச் சென்று விட்டனர். அதனால் பின்புறம் சென்று எஞ்சினுடன் நடந்தவரின் உள்ளங்கள் கால்களில் தார் அப்பிக் கொண்டது.

பாட்டி வீட்டு வாசல் எதிர்ப்புறம் வண்டி நின்றவுடன் அக்குழந்தையால் தாரில் இருந்து கால்களை அசைக்க முடியவில்லை. பாட்டியும், சுவாமியும் உதவிக்கு ஓடினர்.காரியம் மிஞ்சி விட்டது. குழந்தை பின்புறம் இருப்பது ஓட்டுனருக்குத் தெரியாது. பின்புறமாக எஞ்சின் நகர ஆரம்பித்து விட்டது. பாட்டியும், சுவாமியும் சப்தமிடுவதைக் கேட்க காது ஒத்துழைப்புத் தரவில்லை. அது ஏற்கனவே பழுது. எஞ்சினின் கடமுடா சத்தத்தில் அவர் கருமமே கண்ணாயினார். சுவாமி மிக அருகில் செல்லும் போது கனமான சக்கரத்தில் நசுங்கிய உடலில் இருந்து தெரித்த ரத்தமும், சதைகளும் வாறிவீச சுவாமி உடல் முழுக்கக் கிடந்தது. பாட்டி மீதும் ரத்தம்! எலும்புகள் நொறுங்கும் சப்தம் கேட்டது. பிரம்மை பிடித்தது போல் இருவரும் நின்று விட்டனர்.

எஞ்சின் கொஞ்சதூரம் பின்னால் சென்று விட்டு, மீண்டும் முன்புறம் ஓட்டியவர் தார் ரோட்டில் பட்டுப் பாவாடையுடன் குழந்தை பப்படம் போன்று ஒட்டிக் கொண்டு கிடப்பதைக் கண்டு வண்டியை நிறுத்தி விட்டு ஓடி வந்தார்.அவருக்கும் அந்த வயதில் குழந்தை இருந்தது. தலையில் அடித்துக் கொண்டு மண்ணில் புரண்டு அழுதார். ரத்தமும், சதையுமாக உடல் முழுக்க இருக்க நமது சுவாமிக்கு குடம்குடமாக நீர் ஊற்றியதால் சுய உணர்வு வரப் பெற்றார்.

பொன்னம்மாள் பாட்டியின் கணவர் தினமும் பள்ளி வாசல் முன்பு அமர்ந்தபடியே உட்கார்ந்து இருப்பார்கள். அங்கு அவரைப் பள்ளி நிர்வாகிகள் கவனித்து உதவி செய்து வந்தனர். புத்தி நன்றாக இருந்த போது சமயத்தில் கிராம மக்களுக்குப் பண உதவிகள் நிறையச் செய்து வந்தவர். அவரிடத்தில் எல்லோருக்கும் அன்பு உண்டு.பள்ளி வாசலைப் பார்த்த படியே உட்கார்ந்து உயிரைத் துறந்திருந்தார். ஊர் கூடி அரிச்சந்திரன் நாடகம் வாசலில் நடித்து, ஆடிப்பாடி நிறைவாக நல்லடக்கம் செய்தனர். பதினாறு நாட்கள் அன்னதானம் போட்டனர். செம்படவப் பெருமக்கள் குளத்தில் மீன்பிடி குத்தகைக்கு பெரிய தொகை தேவைப்பட்டால் உடனடியாக உதவுவார். அவர் இழப்பு கிராமத்தினரின் சொந்தக் காரியமாக எண்ணி நடந்து கொண்டனர்.

ஒருவர் விவசாய நிலம் வாங்க பண உதவி பெற்றது கிராமத்தினர் அறிவர். சண்முகம் ஐயா இறப்பிற்குப் பிறகு பணத்தைப் பாட்டிக்குத் தரமுடியாது என்று மறுத்ததும் அன்றி கிராம மக்களின் மயானத்தையும வேலியிட்டு ஆக்கிரமிப்பு செய்து கொண்டார். விவசாயம் ஜோராக விளைந்து அவரை மேலும் உயர்த்திக் கொண்டிருந்தது. பாட்டி நிலையும் பரிதாபகரமானது.

ஊர் மக்கள் திரண்டு அவர் வீட்டை முற்றுகையிட்டனர். அவரால் எங்கும் செல்ல முடியாத நிலை. நீரிழிவு வியாதி வேறு. நான்கில் ஒரு பங்கு தர கடைசியாக ஒப்புக் கொண்டார். கண்ணீர் விட்டபடி மதியம் வரை இழுத்தடித்து கடைசியாக நாற்பதினாயிரம் ரூபாய் மட்டுமே தந்தார். அதிலும் தனக்கு சில வுக்கு ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டார்.முஸ்லீம், கிறிஸ்தவப் பெருமக்கள் அவருடன் சப்தமாக சண்டை பிடித்தனர். “பூமி வாங்கக் கொடுத்த பணம். வட்டிக்கா உனக்குத் கொடுத்தார்? ஆண்டவன் உனக்கு கூலி கொடுப்பார்” என்று பயமுறுத்தி வாங்கித் தந்த நல்ல உள்ளம் கொண்ட ஊர்ப் பொதுமக்கள். அவர்களுக்கு நன்றி கூற வேண்டும்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையே அடிக்கடி கண்டதால் தான் நமது சுவாமிக்குத் துறவு எண்ணம் வந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்.காரணம் வேறு!

நன்றி! வணக்கம்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

–ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button