நாம் எண்ணுவதே வாழ்வு.

207

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

13•08•2016,
சனிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(40) மனிதனே புனிதன் —
நாம் எண்ணுவதே வாழ்வு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதனுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வினையின் விளைவுகளை உணர்ந்து கொண்டு விட வேண்டும். அந்த வினைச் செயல்களை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அதன் விளைவுகளை அனுபவிக்கவும் திடமான மனது வேண்டும். அப்படிப்பட்டவர்களை, உண்மையை உணர்ந்து கொண்டவர்களை ஞானியர்கள் என்று உலகம் கொண்டாடுகிறது.
கர்மாவின் செயலில் பொது நலமும் பிரதானமான நடைபெற்று விடுகின்றது.

எல்லாம் தெரிந்திருந்தும் வினையின் செயல்களை, அதன் விளைவுகளைத் தாங்க முடியாத மனம் உள்ள மனிதர்களோ, தனது அறிவின் குறைபாட்டால், வினைப்பயனை ஏற்றுக் கொள்ளாமல் தெய்வ நிந்தனை, குரு நிந்தனை செய்து மற்றவர்களையும் தூஷிக்கின்றார்கள்.. காரணம் தான் நினைத்தது நடக்கத் திட்டமிடாத காரணமும், முயற்சி செய்யாமையும், எதிர்மறையாகப் பேசும் குணங்களும், தகுதிக்கு மீறிய பேராசையும் தான். அஞ்ஞானம் மிகுந்த அத்தகைய நிலையே உலகில் அதிகமாக நடைபெறும் செயலாகும்.

மூன்றாவதாக “வினைப் பயனின் செயலில் கடமை களின் தர்மத்தைத் தனது அறிவுக்குப் பொறுந்தாது” என்று அறிவு பூர்வமாகச் சிந்திப்பதாகக் கூறிக் கொள்ளும் மனிதர்களும் கூறுகிறார்கள். “இன்பமோ, துன்பமோ அவைகள் காலா காலத்தில் நடப்பவைதானே” என்பது அவர்களுடைய வாதமாக இருக்கிறது.

இம் மூவருக்குமே வினைப் செயல்கள் விதி யாக மாறிவிடுகின்ற உண்மையை அறிந்து கொள்கின்ற வாய்ப்புகள் கிடைக்கப் பிரார்த்தனைகள் செய்வோம்.
ஏனெனில் வினை விதி யாக மாறும் நிகழ்வுகள் இறையருளால் மறைக்கப்பட்டிருக்கிறது. இதனை உங்களுடைய குருநாதரை அணுகி உணர்ந்தறிய வேண்டும்.

தோப்புமலைக்கு தவம் செய்து சக்திகளை அடைய அநேக சித்தர்களும், ரிஷிகளும் வந்து போவதற்குக் காரணமே அங்குள்ள ஸ்ரீ வித்யா பீடமே! இதைப் பற்றித் தோப்பு மலைக்கு பிற்காலத்தில் தனது பக்தர்களுடன் சென்று வரும்போது ஏற்படும் அனுபவங்களை நாம் பிறகு விரிவாகத் தெரிந்து கொள்வோம். தற்போது மாயனது மனநிலையை வெளிப்படுத்தும் நேரம்! அதனைக் கேட்போம். இதனை என்னிடம் சுவாமி சொல்லிய போது விவாதம் செய்திருக்கிறேன். அந்த ரகசியத்தைத் தெரிந்த பிறகு மெளனமாகி விட்டேன்.

மாயன் தனது எண்ணத்தை வெளிப்படுத்த சுவாமி ஒரு நிபந்தனை விதித்தார்.மாயன் கூறுவதை ஸ்ரீ வித்யா பீடத்தில் வைத்துச் சொல்ல வேண்டும். முதலில் மாயன் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களிடம் வேண்டாம் என்று சொல்லி விட்டுத் தரையில் உட்கார்ந்த படியே மெதுவாக இறங்கும் இடத்தில், இருந்த ஒரு வேங்கை மரத்தின் கீழே இருந்த கல்லின் மீது சுவாமியை உட்கார வைத்து அருகில் நின்று கொண்டார். ஒருமணி நேரம் அமைதியாகப் பேசாமல் ஜெபித்தபடி இருந்தனர்.

அமைதியைக் கிழித்தபடி விநோதமான மெல்லிய சப்தம் கேட்கத் துவங்கியது. மேகங்கள் வருவது போன்று வெளிச்சமாக மிகவும் வேகமாக வந்து தலைக்கு மேல் சுற்றிவிட்டு, வந்த வேகத்தில் திரும்பிப் போனது. ஒரே வெளிச்சமாக ஒளியை மட்டுமே காணமுடிந்தது. மாயன் சிரிக்க சுவாமி, “என்ன மாயா இது?” என்றார். “இவர்கள் தான் ஸ்ரீ வித்யா பீடத்தில் தவம் செய்யும் புனிதர்களுக்கு உதவிகள் செய்து வரும் வனம்வாழ் தேவதைகள் ” என்றதும் சுவாமி கண்களை இமைக்காமல் திறந்தபடி நேர் பார்வையில் தியானம் செய்தார்.

மாயனும் சுவாமியும் ஸ்ரீ வித்யா பீடம் வந்த போது மாலை நேரம்.
ஸ்ரீ வித்யா பீடத்தின் நுழைவு இடத்தில் மரத்தாமரைகள் பூக்கும் இடத்தில் உட்கார்ந்தனர். சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு மாயன்,”எங்கள் குலகுரு வால்மீகி முனிவன் தோன்றுவதற்கு நெடுங்காலம் முன்பு , சூரியனை வழிபடும் இன்னொரு வனவேடர் குலத்து ராஜனாக வனராமர் பிறந்தார். ராமர்வனம் என்ற மிகப்பெரும் வனத்தை ஆட்சி செய்தார். விஸ்வாமித்திரர் இங்கு தவம் செய்து வந்தவர் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் சக்தியைப் பெறக் கடும் தவமிருந்தார். அவர் அடைய விரும்பிய சக்தி உள்ள இடம் எங்கள் குல வன ராணி தாடகைநாச்சியின் ஆளுகைக்குள் இருந்தது. எங்கள் குலத்தில்” பலா அதிபலா” என்ற சக்தியைப் பாதுகாத்து வந்தனர்.எங்கள் வனராணியை அழிக்காமல் அதை அடைய முடியாது. எனவே வனவேட ராஜன் ராமர் உதவியுடன் பெண் என்றும் பாராமல் கொன்று விட்டனர். ராமர் சக்தி, ரிஷி சக்தி இரண்டும் சேர்ந்து இதைச் செய்து முடித்தனர். எங்கள் குல மானத்தை, தர்மத்தை காக்க விரும்பி அந்த சக்தியைக் கைப்பற்ற விரும்புகிறேன்.எதிர் காலத்தில் யாரும் தவம் என்ற பெயரில் எங்களை அழிக்க விட்டுவிட மாட்டேன். வனத்திற்குள் யாரையும் நுழைய விடமாட்டேன். விஸ்வாமித்திரர் வனராமனை வைத்து அடைந்தது போல் உங்களை வைத்து நான் அடைய விரும்புகிறேன். தவறு இருந்தால் கூறுங்கள்” என்றார்.

சுவாமி மெளனம் காத்தார். மாயன் மீண்டும், “வனதேவதைகள் எனக்கு உதவ மறுக்கின்றனர். நீங்கள் சிவனருள் பெற்றவர். எனக்கு உதவாமல் இங்கிருந்து நீங்கள் போக முடியாது. நான் எதற்கும் துணிந்தவன்” என்று  கடூரமானார்.

சுவாமியும்,”மாயா நீ என்னை ஒப்புக்காக மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறாய். மற்றவர் விரும்பாத ஒன்றை அடைய விரும்புகிறாய்! அது உனது இஷ்டம். நீ தேடுபவன்! நான் வழி சொல்ல வந்தவன்! உன் அசுர குணத்தை என்னிடம் காட்டாதே. நான் பயப்பட மாட்டேன். இதோ நான் புறப்படுகிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்” என்றார்.
மாயன் பெருமூச்சு விட்டுத் தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டார். சுவாமியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவரது லட்சியத்தைவிட அவர் நிலை பரிதாபமாக இருந்தது. “சொல்லித் தருகிறேன் ஆனால் உடன் இருக்க மாட்டேன்” என்று கூறி விட்டு குருநாதர் சொன்ன அந்த வித்தையைச் சொன்னார் சுவாமி!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button