நினைப்பது நடக்கும் தகுதி!

143

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

12•08•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(39) மனிதனே புனிதன் —
நினைப்பது நடக்கும் தகுதி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உலகமும், மனித வாழ்வுரிமையும், தவமும் மூன்றுமே சமநிலை எய்தினால் மட்டுமே தூய்மையான இறையருள் பெறுகின்ற அனுபவப் பாடம் உண்டாகும்! இராம காவியத்தில் வேள்வி பல இடங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேள்வியின் நோக்கம் பல வழிகளில் மற்றவர்களுக்காகச் செய்யப்பட்டாலும், யாகங்கள் பலவாகச் சொல்லப் பட்டாலும், யாகத்தைச் செய்து வைத்தவர்கள் நோக்கம் மட்டும் ஒன்று தான்! அது ‘உலக நன்மை’ க்காகவே! உலகம் தூய்மை அடைந்தால் அதனுடைய சிருஷ்டியும் சமநிலையில் இருக்கும்!

மனித வாழ்வின் உரிமையானது உழைப்பைச் சார்ந்ததே! உழைப்பை உயர்வு படுத்தவே அதனை சேவை என்றும் சொல்வதுண்டு. இதனையும் வேள்வி என்றே ஞானிகள் குறிப்பிடுகின்றனர்! பயன் கருதாப்பணி எனவும் சொல்வர்! இங்கு உடலும் உள்ளமும் சமநிலையை அடைகிறது. இல்லற இன்பத்தைக் கணவனும், மனைவியும் அடையும் நுகர்ச்சியும் கூட, வேள்வியில் போடப்படும் அவிஸ் உலகை சமநிலை படுத்துவது போலவே, சிற்றின்ப நுகர்வால் உடல் சமநிலை அடைகிறது. அனைத்தையும் ஈஸ்வரார்ப்பனம் செய்வதில் தான் இயற்கை ரகசியம் அடங்கியுள்ளது!

மனிதன் சமுதாயத்தைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. தனது உழைப்பின் ஒரு பகுதியை சமுதாய முன்னேற்றத்திற்காக தானம் செய்து இறையருளைப் பெறுவதையும் வேள்வி எனறே கூறப்படுகிறது. இதனால் சமுதாய சமநிலை ஏற்பட்டு, ஈஸ்வரார்ப்பன சக்தி அருளால் பயன்கருதா முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல வழி பிறக்கிறது.

தவத்தினால் தீயகுணங்கள் வெளியேற்றப்பட்டு, உடல், மனம், புத்தி, அறிவு மற்றும் பஞ்சேந்திரியங்களின் நுகர்வுகளாகிய உணர்வுகள் தூய்மை பெறுகின்றன. சகல குற்றங்களும், எதிர்மறை எண்ணங்களும், பேதாபேதங்களும், வேற்றுமை உணர்ச்சிகளும் மறைந்து விடுகின்றது. இத்தகைய தவவேள்வியைச் செய்தவர் வனவேடனாகிய வால்மீகி ரிஷியாவார்.

காமம் என்பதை போகம் என்றும் அனுபவித்தல் என்றும் சொல்லலாம்.மனம் அடங்காக் காமம் மிகுத்ததால் தான் தசரதச் சக்கரவர்த்தி மீளாத துயரத்திற்கு ஆளானார். உடலின் தசவாயுக்களாகிய
தேரினை நடத்தும் வல்லமை பெற்ற தசரதனின் காமம் ஈஸ்வரார்ப்பனம் செய்யப்படாத ஒன்று! இதில் மனம் அடங்காது!

அதைப் போன்றதே ராவணேஸ்வரனின் காமமும், கட்டுக்கடங்கா வேகமும், காமவேள்வித்தீ அவன் குலத்தையே வேரறுத்தது.

வானர வேந்தன் வாலி, சுக்ரீவனிடத்திலும் ஈஸ்வரார்ப்பனம் செய்யப்படாத காமம் வாலியின் வீழ்ச்சிக்கே அடிகோலியது. முறைப் படுத்தப்படாத காமத்தின் விளைவு எத்தகைய தீமையை ஏற்படுத்தும் என்பதை விளக்குவதே ராம காவியம் காட்டும் உண்மை!

இனி வனவேடன் வால்மீகியின் காமத்தின் விளைவுகள், எங்கு? எதனால்? எப்படி என்ற கேள்வியில் மனம் ஒடுங்கும் வித்தையை அறிந்து கொண்டதில் தான் உள்ளது.

மாயன் கூறிய தனது குலகுரு மரான் என்ற வேடன் ரிஷியான புதிய கதை வியப்பைத் தந்தது!
வில்வேடன் மரான் தனது அளவிட முடியாத காமத்தைப் பூர்த்தி செய்யும் பிரிய மனைவி, வயோதிக பெற்றோர் வளமாக வாழ வேண்டும் என்று ஆசை கொண்டான். பழனியில் இருந்து கேரளாவிற்குச் செல்லும் பயணப்பாதை ஒன்று இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் வழியே அங்கலக்குறிச்சி, கோட்டூர், செம்மனாம்பதி வழியாக மலையாள தேசம் செல்லும் அந்தப் பாதையில், தோப்புமலை வில்வேடன் மரான் தலைமையில் கொள்ளைக் கூட்டம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது. ஆனைமலை அரசினால் அவர்களை அடக்க முடியவில்லை. வேடர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மரங்களின் பெயரைச் சூட்டுவார்கள். மரா என்பது வாசனை மிகுந்த உயர்ந்த மரம்.

இவர்களது கையில் அகப்பட்டுக் கொண்டார் தவத்திற்கு வந்த நாரதர் மகரிஷி. தோப்பு மலை கொண்டு செல்லப்பட்டு வனத்தில் காவலில் வைக்கப்பட்டார். “நீ செய்வது பாவமான காரியம்.திருடுவது, கொலை புரிவதான மகாபாவத்தை, உன்னால் உதவி பெறும் உனது குடும்பம் ஏற்காது” என்று கூறினார் நாரதர். அதை தனது குடும்பத்தினரிடம் வனவேடன் மரான் கூறினான். அவர்களும்,”உனது கொள்ளைச் செல்வத்தில் மட்டுமே எங்களுக்குப் பங்குண்டு. உனது பாவம் உன்னுடையது. அதில் எங்களுக்குப் பங்கில்லை” என முடிவாகக் கூறினர்.

அதைக் கேட்டு மரான், வியப்பும், திகைப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டு உண்மையை உணர்ந்து கொண்டு செய்துவிட்ட பாவத்திற்குப் பரிகாரமும், விமோச்சனமும் வேண்டி நாரதரிஷியினைப் பணிந்து நின்றான். அவரையே தனது குருவாக ஏற்றுக் கொண்டு விட்ட அவன் மீது அவருக்குக் கருணை பிறந்தது. ராம மந்திரம் உபதேசம் செய்தார். அது உள்ளத்தில் புரியாததால் அவன் பெயரை ஜெபம் செய்து வரும்படி கூற அதுவே பிறகு இனிமையான ராமநாம கீர்த்தனையாகியது. மனம் அடங்க வெறும் உச்சாடன ஜெபம் உதவாது; ஜெபத்தை இனிமையான கீர்த்தனையாக மாற்றியதால் அதிலேயே ஆழ்ந்து, உணர்வு கடந்த பேரானந்த நிலை பெற்று விட்டான். பிரம்மத்தில் லயமாக வைத்தது அவன் மனதினுள் உச்சரித்த “ராம்” நாதஜெபம்!

குருஈஸ்வராலயம் மெய்யன்பர்களுக்கு ஈஸ்வர குமாரர் தொண்டனின் ஒரு வேண்டுகோள். சுவாமி அவர்கள் எந்த ஞானப்பாடங்களைக் கூறினாலும் சுவைபடவே எங்களிடம் கூறுவார். அது அவர் குருநாதரிடம் கற்றுக் கொண்டு அருளாசி பெற்ற வந்த வித்தையது! அவனது அருளால் அவன் தாழ் வணங்குவது போன்றதே! என்னுள் இருந்து அவர் இயக்குறார் நான் இயங்குகிறேன்! மற்றபடி எல்லாக் கருத்துக்களும் அவருடையதே என்று அடக்கத்துடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

சுவாமி அவர்கள் குருமஹா ஜெபத்தை இனிமையான பாடல் போன்றே, நாக்கு, உதடுகள் அசையாமல் மனதினுள் மிகவும் சப்தமாக இனிமையாகப் பாடும்படி கூறியபடி நாங்கள் அதனைக் கடைப்பிடித்து உன்னதநிலை பெற்றோம். ஒரு சித்து நிலையைக்கூட அவர் ஆலோசனை இன்றி வெளிப்படுத்தி விட்டேன். தக்க சமயத்தில் சுவாமி வந்து விடுவார்கள்! என்னைத் தடுத்துக் காப்பாற்றி இருக்கிறார்கள். சித்து விளையாட்டெல்லாம் வேண்டாம் என்பார். சக்தி இழப்பு ஏற்பட்டு விடும் என்று எனக்கு அறிவுறுத்துவார். அவருக்கு என்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

நாரதமகரிஷி தோப்பு மலைக்கு தவம் செய்ய வந்தபோது ராமர் வனத்தில் உள்ள குகையில் தங்கி இருந்தார். மரான் தவத்தில் சிறந்து விளங்கியதால் புற்று தவத்தில் பெருமாள் இருப்பதைச் சொல்லிக் கொடுத்து, தோஷம் நீக்க வைத்தார். அவருக்கு “வான்மீகி” என்ற பெயரையும் நாரதரிஷி இட்டார். அதற்கு அர்த்தம் ‘புற்றிலிருந்து பக்குவம் பெற்ற உத்தமன்’ என்பதாகும்!

மாயன் சுவாமியை வாராவாரம் சனி, ஞாயிறு கிழமைகளில், ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு இடமாகக் கூட்டிச் சென்று இராம காவியம் நடை பெற்ற இடங்கள் என்று அன்புடன் காட்டினார். ஆனால் தாடகை கோயில் கொண்ட, விஸ்வாமித்திரர் யாகம் செய்த இடத்திற்கு, சுவாமியை மட்டும் போகச் சொல்லி விட்டு சுவாமி வரும் வரை காத்திருந்து, மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வார்.

மாதக் கணக்கில் வாராவாரம் புதுப்புது அனுபவங்கள் சுவாமிக்கு ஏற்பட்டது. பற்பல மூலிகைகளை தரிசிக்கும் பாக்கியம் மாயனால் ஏற்பட்டது. விஸ்வாமித்திரர் தவம் செய்து சக்தி பெற்ற வனத்திற்கு வெளியே தனியாக ஒரேஒரு மரம் மட்டுமே இருக்கும். இந்த வரலாற்றில் அந்த மரம் இருக்கும் இடம் முக்கியம் வாய்ந்தது. அங்கு சுவாமியை மாயன் அழைத்துப் போய் அதன் நிழலில் அமரவைத்துப் பல ஆன்மிக விஷயங்கள் பேசப்பட்ட இடம். நமது குருஈஸ்வராலய மெய்யன்பர்கள் பலருக்கும் அந்த இடம் தெரியும்.

ஏனென்றால் வெளிநாட்டு பக்தர்களும், நமது பக்தர்கள் அனைவரும் அதிசயத்தக்க, பிரமிப்பை ஏற்படுத்திய சம்பவம் அங்கு நடந்ததைக் கண்களால் நேரில் கண்ட இடம்! மாயனும் தனது உள்ளத்தைக் திறந்து சொல்லப் பயப்படுவதும், எதனையோ அடைய ஆசைப்படும் படுகிறார் என்பது மட்டும் புரிந்தது! சுவாமி பொறுமையாக ஸ்ரீ வித்யா பீடத்தில் கவனத்தைச் செலுத்தி தவமிருந்து வந்தார். விஸ்வாமித்திரர் யாக குண்டம் அமைந்திருந்த அவரது பண்டைய ஆஸ்ரமத்தில் யாகம் செய்து தவமிருந்து வருவதில் புதிய தெம்பும், உற்சாகமும் கொண்டார். வனத்தில் சக்தி முற்றுப் பெறாமல் இறந்துபட்ட, மாந்திரீக ஆவி ஆத்மாக்களின் நடமாட்டத்தைப் பார்த்தாலும், மாயனிடம் அதுபற்றிப் பேசமாட்டார். மாயன் அந்த சமயங்களில் சுவாமி முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பார். மாயனின் நோக்கமும் சுவாமிக்கு மெல்ல மெல்லத் புரியத் துவங்கியது.

சுவாமி அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் கூறுவதென்றால் எனக்கு அது முடியும் என்று கூறுவதற்கில்லை! நாங்கள் அவரிடம் தெரிந்து கொண்ட செய்திகள் அநேகம். காலம் கருதி மிகவும் சுருக்கி எழுதி இருக்கிறேன்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button