ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமியும், இறையருள் சக்தியும்.

0 163

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

வணக்கம் குருஈஸ்வராலய மெய்யன்பர்களே!

01•07•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம், பொள்ளாச்சி.

(2) மனிதனே புனிதன் – ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமியும், இறையருள் சக்தியும்.
•••••••••••••••••••••••••••••••••
கர்நாடக தேசத்தில் காவிரி ஆற்றின் கருவறையில் தோன்றிய அழகிய சிற்றூர் ஈஸ்வரமங்கலம். அங்கு “சிவகாமி பட்” என்ற ஏழை அந்தணர் குலதெய்வ கோயில் வழிபாடு செய்யும் தொழில் புரிந்து வந்தார்.

எவரிடத்திலும் யாசகம் பெற மாட்டார். கோயிலில் கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பம் இருந்தது.வறுமையின் கொடுமையை குடும்பத்தினர் அனுபவித்து வந்தனர்.

அந்தக் குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக, “ஈஸ்வர பட்” என்ற திரு நாமத்தினைக் கொண்டு, பிறந்துள்ள திருக்குமரன் தான், நமது சுவாமி நாகராஜர் அவர்களின், தெய்வீக ஞான குருவாகும்!

குருகுலக் கல்வியில் சிறந்து விளங்கிய அவருக்கு ஆசான் வைத்த சோதனைகள் மிகவும் அதிகம். அவைகளைச் சாதனைகளாக மாற்றிவிடும் வல்லமை மிகுந்தவராக ஈஸ்வர பட் விளங்கினார்.

கல்வி கற்கும் நேரம் தவிர குருகுலக் பசுக்களை மேய்த்து வருவது, ஆசிரம சேவைகள் செய்வது எல்லாம் பசி பட்டினியுடன் தான்.

பத்து வயதே நிரப்பப் பெற்ற இவர் திறமையைக் கண்டு, சகித்துக் கொள்ள முடியாத சகமாணவர்களின், பொறாமை குணத்தால் இவர் அல்லலுற்றார்.

அவரது ஆசானும் குருகுலத்தில்
சாப்பிடக்கூடாது; ஆனால் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து விட்டார்.

மற்ற மாணவர்களின் கோள்குறளி பண்ணும் குணத்தை மாற்றவும், உண்மைச் சீடனின் ஆற்றலைப் புரிய வைக்கவும் ஆசான் அப்படி நடந்து கொண்டார்.

பசுக்களை மேய்க்கச் செல்லும் போது பசிமயக்கத்தில் படுத்து விடுவார்.மடி நிறைந்த பசுக்கள் இவர் முகம் கண்டு அருகே வந்து பாலைச் சுரந்துவிடும்.பசுவின் பாலைச் சாப்பிட்டு பசி ஆறுவார்.

மாதக்கணக்கில் பட்டினி போட்டும் இவரின் உடலில் சோர்வு வராமல் உழைப்பது கண்டு வியந்து, உண்மையைக் கண்டுபிடித்து, பால் சாப்பிட தடைவிதித்தனர்.

பசி தாளாமல் அருகில் இருந்த குலதெய்வமாகிய ஈஸ்வரர் ஆலயம் சென்றார். உச்சிவேளை கோயில் பிரசாதம் கிடைக்காதா என்று ஏங்கியவர், கோயில் கதவு நடை சாத்தியிருக்கக் கண்டு பசியுடன் அமர்ந்தவர் உடலை
விட்டு உயிர் நீங்கியது.

இவரைத் தொடர்ந்து கண்காணித்த பிற மாணவர்கள்
விழுந்த உடலைப் பார்த்து உயிர் பிரிந்ததை உறுதி செய்து கொண்டு, ஆசானிடம செய்தியை கூறப்போயினர்.

சூரியப்பிரகாசம் போன்ற ஜோதிச்சுடர் அபிஜின் முகூர்த்த வேளையில், “ஈஸ்வர பட்” உடலுக்குள் சேர்ந்து அவருடன் ஐக்கியமாகி உயிருடன் எழச்செய்தது.

அன்றாடம் நம்பிக்கையுடன் வழிபட்ட குலதெய்வமாகிய ஈஸ்வரரே அவரது உடலினுள் இருந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குருகுல ஆசானும் மாணவர்களும் வந்து பார்த்த போது, தவத்தில் அமர்ந்து முகம் பிரகாசத்தோடு விளங்கும் தனது மாணவனைக் கண்டார். குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார்.சகலவித உபசாரங்களும் செய்வித்தார்.

இப்படிப்பட்ட சீடனைப் பெற்றது தனது பாக்கியம் என்று மகிழ்ந்து போனார்.பிற மாணவர்கள் மனந்திருந்தினர்

ஈஸ்வர மஹா ஜோதி அவருள் இருந்து அவரை இயக்க ஆரம்பித்தது.ஆதவன் தன் உக்கிரத்தினை மாற்றி மதியாக உருமாறிய பின்பு அனைத்தும் கைவரப்பெற்றது.

அன்று அஷ்டமி திதி, உத்திராடம் நட்சத்திரம், சுக்கலபட்சம், வெள்ளிக்கிழமை.

அனைவரையும் தாயாகவும், தந்தையாகவும் மதிக்கும் ஈஸ்வரபட்டின்,அறிவு,ஆற்றல், தெய்வீகம்,பண்பாடு கண்ட ஆசான் இவரை தெய்வீக அருள் பெற்ற பிள்ளையாக எண்ணி வரலானார்.

தவத்தில் ஈடுபடும் இவரைக் கண்டு தாயும் தந்தையும் தங்களது குலதெய்வமான சாட்சாத் ஈஸ்வரன் என்றே கருதினர்.

யாசகம் ஏற்காத குடும்பத்தில் பிறந்த இவர் யார் அன்புடன் தந்தாலும் ஏற்றுக் கொள்வார்.

அனைத்து உயிர்களையும் நேசிக்கும் இவர் மதம் கடந்து, மொழி கடந்து, தனது தெய்வீக ஆற்றல் சக்தியை வெளிப்படுத்தினார்.

ஈஸ்வர மஹா ஜோதியின் எண்ணத்தை நிறைவேற்றிடும் பொருட்டு, பெற்றவர்களின் ஆசியுடன் வீட்டைவிட்டு, தெளிவான மனநிலையில் வெளியேறினார்.

வட திசை கைலாசம் நோக்கி தனது பன்னிரெண்டு வயதில் பாலதுறவியாக, பசிதாகம் அற்ற யோகியாக வழி நடந்தார். இறைசக்தி எல்லா நேரங்களிலும் துணை இருந்து இவரைப் பாதுகாத்து வந்தது!

கள்ளிப்பாலை அருந்த வைத்து இவருக்கு துன்பம் கொடுத்த சக மாணவர்கள், ஈஸ்வரபட் உயிர் பெற்று மீண்ட அதிசயம் கண்டு கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

மன்னிக்கும் மனம் வேண்டும் மானுடர்க்கு என்ற கொள்கை உடையவர். இவருக்கு சகல பாஷைகளும் கல்லாமல் இயல்பாகவே இவருடன் இருந்து வந்தது.

வழிப்பயணத்தில் பற்பல அனுபவங்கள் பெற்ற பாலயோகியைக் கண்ட மக்கள் ஆசி வேண்டி வழிபட்டனர். மெளனமுடன் இருந்து தவம் செய்யும் இவர் தேஜஸ் கண்டு
வியந்தனர்!

(இந்த செய்திகளை நமது நாகராஜ சுவாமிடம் கேட்டுப் பதிவு செய்துள்ளேன்)

மனிதனே புனிதன் தொடர்ந்து வரும். நன்றி

— ஸ்ரீ ஈஸ்வர குமாரர் தொண்டன் மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button