மாயவன் மீண்டும் வந்தான்.

0 158

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•08•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(34) மனிதனே புனிதன் —
மாயவன் மீண்டும் வந்தான்:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது முன்னோர்களில் அறிவிற்சிறநத ஞானியர் மனித குலம் வாழவே பற்பல உண்மைகளை தங்களது தவத்தினால் அறிந்து ஏடுகளில் பதிந்தோ அல்லது கர்ணபரம்பரை என்னும் செவிவழியே ஓதி வைத்தனர். பகலெல்லாம் உழைக்கும் மனிதன் இரவில் நன்றாக உறங்கி ஓய்வு கொள்வது மறுநாள் அவனது உழைப்பிற்கு அது சக்தி தருவதாக அமைவது இயற்கை! இவை தர்மங்களுக்கு ஆதாரமாக இருப்பவை.

மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம் இவைகளில் கிழக்கில் தலை வைத்துப் படுத்துக் கொண்டால் மனிதன் புத்திசாலித்தனம் உள்ளவனாகவும், அறிவின் மேம்பாடு அடைபவனாகவும் அவனைப் பிரபஞ்ச சக்தி உண்டாக்குகிறது எனவும்,

தெற்கில் தலை வைத்து உறங்க
உடலில் சக்தியும், நீண்ட ஆயுளும், புதிய தெம்பும் ஏற்படுகிறதென்றும்,
வடக்கில் அல்லது மூலையில் தலைவைத்துப் படுத்து உறங்க உடலில் நோயும், சங்கடங்களும், விபத்துக்களும், அகாலமரணங்களும் சம்பவிக்கும் என்றும் விரிவாக்க கூறப்பட்டுள்ளது. ஆசாரக் கோவை என்ற நூலிலும் இதுபற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது. கர்க்க மகரிஷி என்பவர் மிகவும் உறுதிபட நித்திரையின் அனுகூலங்களைப் பற்றி விளக்கியுள்ளார்.

இதனை விஞ்ஞானப் பூர்வமாகப் படித்து அறியலாம். பூமி தன்னைத்தானே சுற்றும் பொழுது அதனால் மின்காந்த சக்தி ஏற்படுகின்றது. இந்த சக்தி கிழக்கிலிருந்து மேற்காகச் சென்று சுழன்று கொண்டே உள்ளது. மின்காந்த சக்தி சுழலும் பூமியில், வடக்கில், தெற்கில் துருவங்களை ஆகர்ஷிக்கின்றன.
வடதுருவத்தின் வழியாக நவகிரக சக்திகள், நட்சத்திர சக்திகள் அனைத்தும் பூமிக்குள் நுழைந்து தங்கள் காரியங்களைச் செய்து முடித்து விட்டுத் தென் துருவத்தின் வழியே வெளியேறி தாங்கள் புறப்பட்ட இடத்திற்கே போய்ச் சேருகின்றன. இந் நிகழ்ச்சிகள் இடைவிடாது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே உள்ளது. பூமி வடதுருவ வழியே சக்தியை ஈர்ப்பதால்தான் காந்தி ஊசியை வைத்தால் வடக்கு, தெற்காக ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டே இருக்கும்.

இதனைப் போன்ற மனிதனின் உடலும் பூமியின் மின்காந்த சக்தியின் ஆகர்ஷணத்திற்கு உட்பட்டே இயங்கிக் கொண்டு இருக்கும். இரும்பு தான் மின்சார சக்தியில் காந்தக்கல்லாக மாறுகிறது. நமது உடலில் உள்ள இரும்புச் சத்து, காந்த சக்தியில் தொழில் படுகிறது. நமது உடல் எங்கும் படர்ந்துள்ள இந்த சக்தி நாம் தெற்கில் தலை வைத்து உறங்கும் போது காந்த ஊசி போல் வடக்கில் உள்ள காந்தி சக்தி மூலாதாரதவ குண்டலி வழியாக உள்ளே சென்று, தென்துருவம் நோக்கி தலைப் பகுதியில் இழுக்க, தென்துருவ சக்தி அதனைப் பற்றி இழுக்கவும் நமது உடல் சமநிலையை அடைகிறது. சிரசு வடதுருவம் ஆகிறது. அதனால் வடக்கில் தலை வைத்து உறங்கும் போது பூமி வடதுருவம், சிரசின் வடதுருவத்துடன் சேராமல், ஒன்றை ஒன்று தாக்கி உடலில் காந்த சக்தி இடைவிடாது கிடைப்பதைத் தடுத்து விடுகிறது. இதனால் உடலின் இயற்கைத் தன்மை மாறுபாடு அடையும். உடலின் ஆகர்ஷண சக்தியை நாம் கெடாமல் பாதுகாக்கவே இந்த நல்வழிகளை ஞானிகள் முன் மொழிந்தனர்.
ஞானியர்கள் பரிகாரம் செய்யும் போது மட்டுமே தவத்தில் வடக்கிருத்தலை மேற்கொள்வது வழக்கம். அதாவது சாபநிவிர்த்தி செய்யும் போது வடக்கில் தலை வைத்து பரிகாரம் காணலாம் என்று செய்து, வென்று காட்டியவர் மஹா ஞானி பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர்! இது பரிகார ஸ்தலங்களில் மட்டுமே கிரக வக்ர தோஷங்களுக்கு மட்டுமே கடைப்பிடிக்கும் ஓர் அனுபவ உண்மையுமாகும்.
நமது சுவாமி நாகராஜ் அவர்களும் அனுபவத்தில் கண்டு எங்களுக்கு அநேக உண்மைகளைக் கூறினார்கள்.

வாழ்க்கையில் நமக்குள்ளேயே , காமம், குரோதம், பேராசை, கோபம், பொறாமை என்னும் நூற்றியெட்டு தீய குணங்கள் இருக்கின்றன. இதற்குக் காரணம் நம்முள்ளே அறியாமை எனப்படும் அஞ்ஞான இருளே!

அதுமட்டுமல்ல நம்முள்ளேயே, சத்தியம், தர்மம், அன்பு, சாந்தி, அஹிம்சை ஆகிய நற்பண்புகளும் வாழ்கின்றன. நல்ல குணங்கள் ஞானம் ஒளிமயமானது என்றுணர்ந்து, அதனை அடையத் தடுக்கும் தீய குணங்களுடன் மோதுகின்றன. இருபிரிவுகள் மோதும் பொழுது நம்முள்ளே அதற்குச் சாட்சியாக விளங்குபவரே பரம்பொருளாகிய இறை சக்தி. நாம் நற்பண்புகளை உறுதியாகப் பற்றினால், இறையருளானது நம்மை அறியாமை இருளில் இருந்து
காப்பாற்ற, நம்முடைய நற்பண்புகள் வெற்றி பெற உதவி செய்யும். நம்முடைய வாழ்கை அனுபவங்கள் சில பிடித்தும் இருக்கலாம், பல பிடிக்காமலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு, இறைவன் நமக்கு நல்லது செய்வார் என்று மேலும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு வாழ்தலே உத்தமம். இல்லாவிடில்….? வேண்டாம் எதிர்மறையாகச் சிந்திப்பதை நமது சுவாமி அன்றும் சரி இன்றும் சரி ஏற்க மறுத்து, எது நடந்தாலும் அது நன்மைக்கே நடக்கிறது என்பார்.இறைவன் அருள் இன்னும் ஒரு அனுபவப் பாடத்தை நமது சுவாமிக்கு வழங்கியது.

அது தோப்பு மலையில் வனபோஜனம் நடந்த அன்று, நமது சுவாமி அவர்களைச் சந்தித்து உங்களால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்று கூறிய வனவேடன் மாயன் உருவத்தில் வந்து சேர்ந்தது. நமது சுவாமிக்கு ஆச்சரியம்! விலாசம் எதுவும் சுவாமி தரவில்லை; ஆனால் ஆள் வந்து பலசரக்குக் கடையின் எதிரில் சுவாமியைக் கும்பிட்டபடியே நின்று, “நீங்கள் என்னுடன் புறப்பட்டு வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு சிரிக்க, சுவாமி யோசனையில் ஆழ்ந்தார்.

கருப்பு நிற உடலில் பளீரென்று வசீகரிக்கும் சிரிப்பு. வயோதிகனான இந்த மாயனுக்குத் தன்னிடத்தில் என்ன தேவை இருக்கும் என்று சிந்தித்துச் சுவாமி, மாயனை சாப்பிட வைத்து, உடுப்புகள் தந்து, வழிச் செலவுக்கும் பணம் கொடுத்துச் சனிக்கிழமை அன்று வருகிறேன் என்று கூறினார். மாயனும் புறப்பட்டுப் போனார். சுவாமி ஆற்றங்கரை அரச மரத்தின் கீழே அமர்ந்து அமைதியாக தியானம் செய்தார். சுவாமிக்கு இந்த நேரங்களில் கைகொடுத்து உதவும் மஹாஞானி அவர்கள் சுவாமி அருகே வந்து அமர்ந்து கொண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும் )

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button