ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
06•08•2016,
சனிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(33) மனிதனே புனிதன் —
நாகங்களின் ஆக்ரோஷம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாகராஜ் சுவாமி அவர்கள் எதிர்காலத்தில் இவரே, இந்த மகானே சகலமும் என்று எண்ணவைக்கக் கூடிய ஆற்றல் சக்தி மிக்க அந்த மகான் ஆசீவதிக்கும் போது அவர் முகத்தையே உற்றுக் கவனித்தவரின் மனம் லேசாகி விட்டது போல உணர்ந்தார். அப்போது அவர் கழுத்தில் பளபளக்கும் ஒரு அபூர்வ மணி நெல்லிக்காய் அளவு பட்டுநூலால் கோர்க்கப்பட்டு உட்கழுத்தில் காணப்பட்டது. வசீகரம் மிக்கதாக இருந்தது. அது ஒரு தெய்வீக சக்தி உடையது. அதனைப் பற்றிய உண்மைகளை மற்றொரு இடத்தில் சொல்லுகிறேன். சுவாமி நாகராஜ் அவர்கள் அந்த மணியைப் பார்ப்பது கண்டு கை உயர்த்தி ஆசீர்வதித்தார்.
மண்டல பூஜை நடந்து சபரிமலை நடை அடைத்து பிறகு மகர விளக்கு பூஜைக்கு நடை திறந்த சமயம் அது. நமது சுவாமி, சுங்கம்( மார்ச்ச நாயக்கர் பாளையம்) ராமன், வப்படம் தயாரிக்கும் நடராஜன் ஆகியோர் மாலை அணிந்து விரதம் இருந்து வருபவர்கள் உடன் வர, இருமுடிக் கட்டு நிறைவுக்கு பசுநெய் வாங்கப் போனார்கள்.
மீராசா ராவுத்தர் தோட்டத்தில் மிகவும் பெரிய கிணறு இருந்தது. கிணற்று மேட்டில் இரண்டு காளை மாடுகள் பூட்டி ஓட்டும் பெரிய கட்டை வண்டி நின்றிருக்க, வண்டியில் மாடுகளைப் பூட்டிக் கொண்டிருந்தார். அவருக்குப் பார்வை குறைவு. இவர்கள் வருவதைப் பார்த்து தோட்டவேலை ஆட்கள் என்று நினைத்து அதிகாரமாகப் பேசியபடியே வண்டியை கிணற்றுக்குள் தள்ளி விட்டார். மாடுகள் மிரள மீராசா ராவுத்தர் கிணற்றுக்குள் விழ இருந்தார். வண்டி கிணற்றில் விழுந்த சப்தத்தில் மாடுகள் மிரண்டு ஓடின. மாட்டின் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்து இருந்ததால், மிளகாய் பயிரினுள் ஓடிய மாடுகளுடன் அவரும் ஓடி பயிர்களுக்கிடையே அத்தா என்று அலறியபடியே விழுந்து விட்டார்.
அதற்குள் அவரது ஆட்கள் வந்து விடவே அவரை வீட்டிற்கு அழைத்துப் போனார்கள். வண்டி கிணற்றில் விழுந்தது தெரியாத அவர்,” ராமா,சுப்பா வண்டியப் பூட்டுங்கடா” என்று கூவியபடியே போனார். இந்த சப்தத்தைக் கேட்டு பாழடைந்த நாகதேவி கோயிலில் குடியிருந்த இரண்டு இணை நாகங்கள் வெளியே வந்தன. அவைகளை யாரும் பார்த்தது கிடையாது. வழிவழியாகச் சொல்லி வந்த கதைதான் பிரபலமாகவும், பயம் தருவதாகவும் இருந்தது.
அவை அத்தனையும் உண்மை என்பது சுவாமிக்கும் அன்று புரிந்தது. நெய் வாங்கப் பொன்னாக் கவுண்டர் தோட்டம் சென்றவர்கள் மீராசா ராவுத்தர் செய்த களேபரத்தில் அங்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பச்சை மிளகாய் செடிகள் வரிசை வரிசையாக அசைவதைப் பார்த்து வப்பட நடராஜூ,” சுவாமி காட்டு நாய்கள் வருகிறது” என்று பயந்து கூச்சலிட்டு ஓடியே போய் விட்டார். நமது சுவாமியும் சுவாமி வயதை ஒத்த ராமன் சாமி இருவரும் செடிகள் எல்லாம் அசைவதைப் பார்த்தபடியே நின்றார்கள்.
செடிகளைவிட்டு வரப்பின் மீது ஐந்தடிஉயரம் எழுந்து நின்று படம் விரித்து தலையை இருபுறமும் அசைத்தபடியே நின்ற படுபயங்கர உருவத்தைக் கண்டு சுவாமி பின்னால் மறைத்து நின்று கொண்ட ராமன்,” ஐயப்பா காப்பாற்று” என்று அழுதார். மியூசியத்தில் கூட அத்தனை பெரிய நாகம் கிடையாது. சுவாமியை முன்னால் பிடித்துத் தள்ளி விட்டு விட்டு, மெதுவாக பின்னால் நகர்ந்து சென்றவர் ரோட்டின் ஓரம் இருந்த பள்ளத்தினுள் விழுந்தவர் எப்படி ஓடிப்போனார் என்பது தெரியாது.
நாகம் சுவாமியைப் பார்த்தபடியே நின்று ஆடிக்கொண்டு இருந்தது. சுவாமி மெல்ல கோயில் மேடையை நோக்கி நகர்ந்து செல்ல அங்கும் இதன் இணை ஒன்று ஆளை விழுங்கி விடும் அளவு மிகப்பெரிய உருவத்துடன் நின்றிருந்தது.
சுவாமி நோக்கி மிகவும் வேகமாக வந்து எதிரில் நின்று கொண்ட நாகம் உற்றுப் பார்த்தபடியே எழுந்து உயரமாக நின்று கொண்டது. இப்போது சுவாமி கைகூப்பி வணங்கி விட்டு சர்பமூச்சில் ஜெபம் செய்யத் துவங்கினார். மகான் குறிப்பிட்ட நாளும் அதுவே! ஜெபம் செய்யச் செய்ய அதுவும் நெருங்கி வரவர கோயில் மேடையை நோக்கிப் போனார்கள். நாகம் ஜெபக் கட்டுக்குள் அடங்காமல் வாயைத் திறந்து திறந்து மூடி ஒரு வகையான ஒலியை உண்டாக்கியது. அது பெருமூச்சை ஒத்ததாக இருந்தது. “அம்பலநாயக்கரின் குலதெய்வமான நாக தேவதையே! கிராம சாபம் விலக உதவிடுவாய்! “என்று எண்ணியபடி மகான் கூறிய மந்திரத்தை, ஜெபத்தை சர்பமூச்சில் நாவசையாது ஜெபித்தபடி, அடுத்த வரப்பினில் பின்னால் நகர்ந்து இறங்கியவர் கால்கள் தடுமாறிட வேகமாக வந்த சர்பம் தனது கனமான உடலால் சுவாமி மார்பில் மோதியது.
நாகமும் சுவாமியும் கண்களை இமைக்காது ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்தபடி இருந்தனர். சுவாமியின் ஜெபமும், சர்பமூச்சும் ஒரே சீராக இயங்க, நாகமும் சுவாமியின் தலைக்கு மேல் உயர்ந்து நின்று நிதானமாக ஆடியது. சுவாமியின் ஜெபம் கூடக் கூட அதன் ஆவேசம் மட்டுப் பட்டது. தரை மீது படத்தைத் தாழ்த்தி வட்டவடிவில் சுழன்று ஆடியது. இருவரும் இப்போது கோயில் மேடைக்கு அருகில் வந்து விட்டிருந்தனர்.
நாகதேவி கோயில் மேடையில் நின்று ஆடிய ஆண் நாகமும் தனது வாலைத் தரையில், மேடையில் அடித்தபடியே மூச்சை சப்தமாக வெளியிட்டது. சுவாமியின் முன்பு காலடியில் தங்களுடைய பெரிய ஸர்பப் படங்களை விரித்து ஆடி பலமுறை தரையில் அடித்து ஓய்ந்து அமைதியாக நீண்டு படுத்து சுவாமியைப் பார்த்தன. நமது சுவாமியும் அமர்ந்து எந்த எண்ணமும் அற்று தவத்தில் ஆழ்ந்து போனார்.
தவத்தை நிறைவு செய்த போது நாகங்கள் அங்கிருந்து சென்று விட்டிருந்தன. பிறகு அங்கு திரும்ப வரவும் இல்லை, காணப்படும் இல்லை! தேஜஸ் மிகுந்த மாமகான் சுவாமி அருகே நின்று தலையைத் தடவிக் கொடுத்தவுடன், யுகயுகமாகத் தொடர்ந்து வரும் பந்தம் போன்ற உணர்வு ஏற்பட்டது. அவர் எங்கிருந்து, எப்படி? சமயத்தில் வந்து உதவிகள் செய்கிறார் என்பது மர்மமாகவே இருந்தது. அன்றிலிருந்து கிராம வாலிப வயதுப் பையன்கள் அம்பல நாயக்கர் கோயில் அருகே மயங்கி விழுந்து கிடப்பதும் நின்று போனது.மாமகான் அவர்கள், சுவாமி வீட்டில் மூன்று வேளையும் தெய்வங்களுக்கு உணவு படைத்து, உண்ணக் கூப்பிடும்படி கேட்க நமது சுவாமியும் சம்மதித்தார்.
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.